பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு!
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்மொழிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும், அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, திமுக உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் பேச வேண்டும் என கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விசாரணைக்கு ஏற்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அனைவரிடமும் ஆலோசித்து விட்டு தேதியை தீர்மானிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது ஏன்? என்பது குறித்து பார்க்கலாம். மணிப்பூர் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றால் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பில்லை என்றாலும் பிரதமர் பேசுவார் என்பதற்காக தீர்மானம். எனவே, பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாற்காகவே தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் மணிப்பூர் தொடர்பான கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் வைக்க திட்டமிட்டுள்ளது.