பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவை ஊக்குவிக்கிறோம்..! ஐஎம்எப்
ஐஎம்எப், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது. பாசுமதி அல்லாத வேகவைத்த அரிசி மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று உணவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இதன்பின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர்-ஆலிவியர் கௌரிஞ்சாஸ், தற்போதைய சூழலில், இந்த வகையான கட்டுப்பாடுகள் உலகின் பிற நாடுகளில் உணவு விலைகளில் ஏற்ற இறக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக, உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்திய அரசாங்கம் ஜூலை 20 அன்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி வகைகளில் வெள்ளை அரிசி 25 சதவீதம் ஆகும்.
மேலும், இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் மொத்த ஏற்றுமதி 2022-23ல் 4.2 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 2.62 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய இடங்கள் அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.