பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A கூட்டணி எம்பிக்கள் முடிவு!
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு என தகவல்.
மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின் தொடர்ந்து, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்கட்சிகளான I.N.D.I.A கூட்டணி எம்பிக்கள், பதாகைகளை ஏந்தி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை மதியம் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மாநிலங்களவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்க I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இந்த சமயத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.