நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது.! தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு.!

Ambedkar Photo issue

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை சென்னை தலைமை நீதிபதி ஏற்றார். 

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர் மற்றும் காந்தி புகைப்படங்களை தவிர்த்து வேறு தலைவர்களின் புகைப்படம் இருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றமானது நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்த சுற்றறிக்கைக்கு தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவானது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, நாம் தமிழர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்துள்ளார். இதனை அடுத்து ஒரு அரசு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி தொடர்ந்து பரவியதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களை நேரில் சந்தித்து தலைவர்கள் புகைப்படம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் நீதிமன்றங்களில் இருந்து அகற்றப்படாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார் எனவே தற்போது உள்ள நடைமுறையை தொடரும் என தலைமை நீதிபதி தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்