மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தால் 3-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு..!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தொடர் வன்முறை நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில், 3-வது நாளாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிய நிலையில் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி 12 மணிக்கு அவைக்கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே முழக்கங்களை அதாவது, பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என எழுப்பினர். இதனால் மீண்டும் இன்று இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவைக்கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே முழக்கங்களை எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.