ட்விட்டர் சமூகவலைதளத்தின் பெயர் மற்றும் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!
ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை X என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், ஊழியர்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.
இதுபோன்று, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். இந்த சமயத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என்று மாற்ற முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அவரது தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ் கார்ப்பின் லோகோவை மையமாக வைத்து ‘X’ என்ற எழுத்தை வைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எலான் மஸ்க், ட்விட்டரின் புதிய லோகோவின் சிறிய வீடியோ கிளிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், முன்னணி சமூகவலைத்தளமான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை X என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். ட்விட்டரின் லோகோவை நீல குருவிக்கு பதில், எக்ஸ் (X) எனும் குறியீடாக மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், தற்போது மாற்றினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய சில நாட்களில் நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக நாயை லோகோவாக வைத்த நிலையில், தற்போது எக்ஸ் என்ற குறியீட்டை லோகோவை மாற்றி உள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் பெயர் மற்றும் லோகோ மாற்றம் செய்யப்பட்டது குறித்து இணையத்தில் Twitter X என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
மேலும், X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். விரைவில் ட்விட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும், அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும் எனவும் எலன் மஸ்க் தெரிவித்திருந்தார்.