தொடர் மழைஎதிரொலி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு..!

Default Image

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா, சிக்மகளூர் உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மழை நீடித்தது.

குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா மடிகேரி ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளம் காவிரியில் வந்து சேர்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 883 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 22 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 342 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

124.8 அடி உச்சநீர் மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 82.8 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 86.6 அடியாக உயர்ந்தது.

இதே போல நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் 4 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. நீர்மட்டம் 100 அடியை தாண்டும் போது அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடும் சூழல் உள்ளது.

இதே போல கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்யும் கன மழையால் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 46.72 அடியாக இருந்த நிலையில் அணைக்கு 17 ஆயிரத்து 921 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 100 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கபினி அணையின் நீர்மட்டம் 12 அடி அதிகரித்திருக்கிறது. இதே நிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் கபினி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலதாக திறக்கும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1800 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 847 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 616 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.94 அடியாக இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்