காணமல் போய்விடுவார் மோடி : எச்சரித்த ராகுல்..!

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று மும்பையில் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் இளைய சமுதாயத்துக்கு தேவையான அளவுக்கு வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கவில்லை. இதனால் கிராமப்புற உள்கட்டமைப்பு தகர்ந்து வருகிறது.

மக்கள் மத்தியில் பா.ஜ.க. அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால்தான் குஜராத்தில் அவர்களால் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. கர்நாடகா தேர்தலில் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது.

அடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநில தேர்தலும் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த 3 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்.

3 மாநில தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்றால் பா.ஜ.க.வை நிச்சயம் வீழ்த்த முடியும். அதன் பிறகு பா.ஜ.க.வை பார்க்க முடியாது. பா.ஜ.க. சிதறும்.

பா.ஜ.க.வில் சலசலப்பு உருவாகும்போது மோடி இந்த ஆட்சியை விட்டே ஓடி விடுவார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் காணாமல் போய் விடுவார்கள். இதுதான் நடக்கப்போகிறது.

இந்த நாடே மொத்தமாக எழுந்து பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும். அதன்பிறகு பா.ஜ.க.வும் காணாமல்போய் விடும்.

மோடியிடம் இப்போதே அந்த தோல்வி பயம் வந்து விட்டது. அவரது பேச்சை நீங்கள் சற்று உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். அவரது குரலில் ஒருவித நடுக்கம் இருப்பது உங்களுக்குத் தெரிய வரும். பயத்தால் அவர் குரலில் நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நாட்டு மக்களிடம் மத ரீதியாக வெறுப்பை ஏற்படுத்தி சமுதாயத்தைஅவர் துண்டாட நினைக்கிறார். இளைஞர்களையும் விவசாயிகளையும் அவர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். மக்கள் இதை மறக்க மாட்டார்கள்.

நீரவ்மோடி 35 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டி விட்டு இந்த நாட்டில் இருந்து ஓடி விட்டார். மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டார். ஆனால் அவர்களை மோடி இன்னமும் “பாய்” என்று மரியாதையாக அழைக்கிறார்.

இத்தகைய மோடி தனது அரசியல் குருவான அத்வானிக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. அவரை புறக்கணித்து அவமதிக்கிறார். இது பற்றிய எல்லா விபரங்களும் நாட்டு மக்களுக்கு தெரியும்.

கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு மோடி உரிய அங்கீகாரமோ, மரியாதையோ கொடுப்பது இல்லை. வாஜ்பாய் அரசியல் ரீதியாக எங்களை எதிர்த்தார். நாங்களும் அவரை எதிர்த்து போட்டியிட்டோம்.

ஆனால் அவர் இந்த நாட்டுக்காக உழைத்தார். இன்று அவர் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலில் ஓடோடி சென்று பார்த்தது யார்?

நான்தான் முதல் ஆளாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயிடம் உடல்நலம் விசாரித்தேன். மோடி தனது அரசியல் குருக்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை.

மோடி மூத்தவர்களை மதிப்பதே இல்லை. பொது விழாக்களில் கூட மோடி யாருக்கும் மரியாதை கொடுப்பது இல்லை. ஆனால் விழாக்களில் நானே முன் சென்று மோடியை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். அதுதான் நமது பண்பாடும், வரலாறும் ஆகும்.

பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களுக்கு மோடியை விட காங்கிரஸ்தான் அதிக மரியாதை கொடுக்கிறது.

இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் தரம் தாழ்ந்து பேசுவதாக கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்