கருங்கடலில் கப்பல்களை தாக்கும் ரஷ்யா..! ராக்கெட்டுகளை ஏவி பயிற்சி..!
ரஷ்ய கடற்படை கருங்கடலில் கப்பல்களை நோக்கி ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை, கடலின் மேற்பகுதியில் உலாவும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்குச் செல்லும் பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி, பின்னர் உக்ரைன் படைகள் மீது பழி சுமத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரித்தது.
மேலும், உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா கூடுதல் கடல் கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளிடம் தகவல் உள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் தெரிவித்திருந்தார்.
இந்த எச்சரிக்கை வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும், கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதை அடுத்தும் ரஷ்யா கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.