உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- வைகோ..!

Default Image

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் பெற்று, அவற்றை ஏற்கனவே காத்திருக்கின்ற நோயாளிகளுக்கு பொருத்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர்.

இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் வெளி நாட்டு நோயாளிகளே அதிக அளவில் பயன் பெற்றுள்ளனர் என்று உறுப்பு மாற்று-திசு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் விமல் பண்டாரி கவலை தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நோயாளிகள் 31 பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இதயமும், 32 பேருக்கு நுரையீரல் மேலும் 32 பேருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளன.

ஜூன் 9, 2018 வரையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் வெளிநாட்டு நோயாளிகள் 53 பேர் மட்டுமே. ஆனால், இந்தியாவில் 5310 நோயாளிகள் உடல் உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கின்றார்கள். இந்நிலையில், மனித உடல் உறுப்பு மாற்றுச் சட்டம் 1994 விதிமுறைகளை மீறி, வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக மூளைச் சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதும், அதற்காகவே சில பெரும் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு இருப்பதும் மிகப் பெரிய முறைகேடு ஆகும்.

கடந்த மாதம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், “கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் விபத்து ஏற்பட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், விபத்தில் மூளைச்சாவு அடைந்த மணிகண்டன் சேலத்திலிருந்து சென்னை தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு, அவருடைய குடும்பத்தினர் ஒப்புதல் பெறாமல், உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, உக்ரேனியர் ஒருவருக்கு இதயமும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருக்கு நுரையீரலும் பொருத்தப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

கேரள முதல்வரின் கடிதத்திற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி இருக்கிறது.

உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நம் நாட்டு நோயாளிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, வெளிநாட்டு நோயாளிகளிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சென்னையில் நடைபெற்று வரும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஏப்ரல் 3, 2018-ல் டெல்லியில் மத்திய அரசு நடத்திய உயர்நிலைக் கூட்டத் தில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையேக் காரணமாகக் கூறி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதாரத்துறையை மத்திய அரசின் அதி காரப்பட்டியலில் சேர்க்கவும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் டெல்லியின் காலடியில் அடகு வைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு சுகாதாரத்துறையையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிடக் கூடாது.

உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்று வரும் சட்ட மீறல்களை களைய வேண்டும்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று சிறப்பு பெற்றுள்ள சென்னையில், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்