படுக்கை, குளு-குளு ஏ.சி., கழிப்பறை வசதிகளுடன் தயாராகும் 100 பஸ்கள்.! விரைவில் அறிமுகம்..!

Default Image

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவை விட செலவு கூடுதலாக உள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. சேவை நோக்குடன் இயக்கப்படுவதால் நஷ்டம் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தனியாருக்கு இணையாக நவீனங்கள் புகுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு காரணியாக உள்ளது. தனியார் மூலம் படுக்கை வசதியுடன் குளு, குளு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 2,000 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

அதில் 100 பஸ்கள் படுக்கை வசதியுடன் 3 வகையாக தயாராகின்றன. முழுக்க முழுக்க ஏ.சி. மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு வகையும், கீழே சாய்வாக உட்காரும் சீட்டுகள், மேலே படுக்கை வசதியுடன் இன்னொரு வகையும், படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் மற்றொரு வகையும் என 100 பஸ்கள் விதவிதமாக தயாராகின்றன. இவை அனைத்தும் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

பெங்களூரில் உள்ள தனியார் பஸ் பாடிகட்டும் நிறுவனம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் பாடி கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக பாடி கட்டப்பட்ட இந்த வகை பஸ் ஒன்று சமீபத்தில் கரூர் மண்மங்கலம் போக்குவரத் துக்கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் எப்போது இயக்கப்படும் என அமைச்சரிடம் மாலை மலர் நிருபர் கேட்டபோது கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நவீனமாகிறது. ஜெயலலிதா அறிவித்த 2,000 பஸ்களும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகின்றன. சாதாரண பஸ்களும் மழை பெய்தால் ஒழுகாது. ரூப் ஒரே மோல்டிங்கில் வடிவமைக்கப்படுகிறது. அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் இருக்கையில் தீப்பிடிக்காமல் இருக்கும் வகையில் சீட்டுகள் அமைக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்கும் சீட்டுகளின் சாய்வு முன்பைவிட அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் இன்னும் சொகுசாக தூங்கியபடி பயணிக்கலாம்.

படுக்கை வசதி, ஏ.சி. வசதியுடன் தயாராகும் பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிச்சயம் நிறைவேறும். தனியாருக்கு இணையாக இல்லாமல் அதையும் மிஞ்சும் வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்