சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கு – மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்..!
சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்மலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கடத்தி சென்றது யார் என்பது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கபுரம்காலனியை சேர்ந்த சித்திரைவேல், மணி என்ற பள்ளமணி, ஜோதி, கார்த்திக் என்ற குட்டைகார்த்திக் உள்பட சிலர் மீது சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி விவேகானந்தர்காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் சிவசக்திபாண்டியன்(23), சர்க்கரை மகன் கிருஷ்ணன் (25), முருகன் மகன் பாலமுருகன் (24), ராமசாமி மகன் சித்திரைவேல் (30) ஆகிய 4 பேரும் நேற்று மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.