குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் எனக்கு கோபம் வரும்.. அமைச்சர் முத்துசாமி!
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை என அமைச்சர் முத்துசாமி பேட்டி.
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் எனக்கு கோபம் வரும். குடிப்வவர்களை விமர்சிப்பதற்கு பதில் அவர்களுக்கு ஆலோசனைகளை கூறுங்கள். கடுமையான பணிச் சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது அவர்களை குடிகாரர்கள் என கூறக்கூடாது. ஆனால், ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறினால் தவறில்லை என்றார்.
மேலும், 90 ml டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக திட்டம் ஆய்வில் தான் உள்ளது. இதனால் டெட்ரா பேக்கில் வரவும் செய்யலாம், வராமலும் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மதுக்கடையின் வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் இல்லை. மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
21 வயதிற்குகீழ் உள்ளவர்கள் மதுவாங்க வந்தால் அன்பாக அழைத்து அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார். மேலும், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை. இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை.
இந்த சோதனையால் யாரும் தொய்வு அடைய போவதில்லை, சோதனை குறித்து முழு விவரம் வந்தவுடன் தெரிவிக்கப்படும். அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதில் இருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார். எனவே, சோதனை மூலம் எங்கள யாராலும் பயமுறுத்த முடியாது, இப்போதைக்கு அப்படி தான் சொல்ல முடியும் எனவும் கூறினார்.