ஜூலை 18-ம் தேதி “பூமி சம்மான்” விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.!
டெல்லியில் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி இந்த (2023) ஆண்டுக்கான “பூமி சம்மான்” விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். இந்த விருது விழாவில் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 9 மாநில செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்கள் விருது பெற உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார். டெல்லியில் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த “பூமி சம்மான்” விழாவில் பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக “பூமி சம்மான்” விருது பெறும் மாநிலத்தின் வருவாய் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது “பூமி சம்மான்” நிறுவனமயமாக்கலுக்கான முக்கிய ஆண்டாக இருக்கும். நம்பிக்கை மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான மத்திய-மாநில கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு பூமி சம்மான் திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.