அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை.!
அடுத்த 2 நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அடுத்த 2 நாட்களில் உத்தரகாண்ட், அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், சிக்கிம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, நாகாலாந்து, மணிப்பூர், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 18 முதல் 20 வரை ஜம்மு-காஷ்மீர்-லடாக்-கில்கிட் பால்டிஸ்தான்-முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், மேற்கு ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.