தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி…!
தென்காசியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.பழனி நாடார் என்பவர் போட்டியிட்டார். இவர் அந்த தேர்தலில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் தென்காசி சட்டமன்றத் தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி 10 நாட்களில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் காலை 10 மணியளவில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் பழனி நாடார் 1606 வாக்குகளும், அதிமுகவின் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் 673 வாக்குகளும் பெற்று, அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.