கோடநாடு வழக்கு! தீவிரமடையும் விசாரணை – 9 பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு!
கோடநாடு வழக்கில் கொள்ளை நிகழ்ந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்
இந்த வழக்கு விசாரணை விவரங்கள் கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கு தீவிரமடைந்து உள்ளது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 9 பொருட்களை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தது சிபிசிஐடி. கோடநாடு பங்களாவின் ஜெயலலிதா, சசிகலா அறையின் இரு வரைபடங்கள், அவர்கள் அறையில் இருந்த சில பொருட்கள், 3 புகைப்படங்கள், மற்றும் கதவின் தாழ்பாள் உள்ளிட்ட 9 பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பின் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்திடம் இருந்த பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி. ஜெயலலிதாவின் அறை 20-30 என்றும் சசிகலா அறை 20-25 எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள முனிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறது சிபிசிஐடி போலீசார்.
இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடந்த விசாரணையை வரும் 28-ஆம் தேதி இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும், கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களை ஆய்வு செய்ய அனுமதி கோரியும் சிபிசிஐடி மனு அளித்திருந்த நிலையில், இதற்கு நீதிமன்றம் அனுமதி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.