அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து..!
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு 3-வது முறையாக ஒரு வருடம் நீட்டித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்த நிலையில், அவரது பதவி காலத்தையும் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் படி, அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ரா ஜூலை 31-ஆம் தேதி வரை பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில், நவம்பர் 2023 க்கு மேல் மிஸ்ரா பதவியில் நீடிக்க மாட்டார் என்றும், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) முன் நடந்து வரும் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு மூன்றாவது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், நீதிபதிகள், இந்த வழக்கின் கடைசி விசாரணையில் மிஸ்ராவுக்கு பதிலாக வேறு எந்த அதிகாரியையும் அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினர். மேலும், அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு யாரும் இல்லையா? ED இல் திறமையான வேறு யாரும் இல்லையா? 2023க்குப் பிறகு அவர் ஓய்வு பெறும்போது என்ன நடக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.