மணிப்பூரில் துப்பாக்கி சண்டை – 4 பேர் உயிரிழப்பு
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட எழுந்த பிரச்சனை வன்முறையாக உருவெடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூரில் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் காவல் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சண்டையை அடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தினர்.
இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 127-ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.