மூளையை உண்ணும் அமீபா…15 வயது சிறுவனைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் அதிக காய்ச்சலாலும், அல்லது “மூளையை உண்ணும் அமீபா” என அரிய தொற்று காரணமாக ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ளார். இந்த அமீபா குளிக்கும்போது, அந்த சிறுவனின் மூக்கிற்குள் நுழைந்திருக்கும் என கூறப்படுகிறது.
அமீபா தாக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் நேற்று உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கேரளா செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
மூளை உண்ணும் அமீபா:
நெக்லேரியா ஃபோலேரி பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது. அந்த அறிய வகை அமீபா வெதுவெதுப்பான நீர் வாழ்விடங்களில் செழித்து வளர கூடியவையாம். இருப்பினும், இது உப்பு நிலைகளில் உயிர்வாழாது, எனவே கடல் நீரில் காணப்படுவதில்லை. இது பொதுவாக ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள வண்டலில் காணப்படும். இது மிகவும் சிறியது, அதை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
மூக்கு வழியாக அமீபா:
இது குறித்து விசாரிக்கையில், அந்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் குளிப்பதை வழக்கமாகக் வைத்துள்ளார். அப்போது, அமீபா மூக்கு வழியாக உடலில் நுழைந்து மூளைக்குச் செல்கிறது, இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் கடுமையான மற்றும் பொதுவாக ஆபத்தான மூளை தொற்றுக்கு வழிவகுக்கிறது.
அமீபா தாக்கத்தின் அறிகுறிகள்:
இதன் அறிகுறிகள் பொதுவாக தொற்றுக்கு 5 நாட்களுக்குப் பிறகு தொடங்குகின்றன. தலைவலி, காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். பின்னர், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனமின்மை, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா ஆகியவை அடங்கும்.