“மகளிர் உரிமை தொகை” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!
மகளிர் உரிமை தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குறைந்தபட்ச வயது வரம்பு, ஆண்டு வருமானத்தை கணக்கீடு செய்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். முதல்வர் கூறுகையில், மகளிர் உரிமை தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றுள்ளார்.
ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். குடும்ப அட்டை, வயது வரம்பு, ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.