8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு..!உளவுத்துறை தீவிர கண்காணிப்பு..!
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 274 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக 7500 ஏக்கர் விளை நிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 6 ஆறுகள், 8 மலைகள், குடியிருப்புகள், பள்ளிகூடங்கள், 100-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களும் அழியும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே விரைவு சாலை அமையும் கிராமங்களில் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட அரூரில் இருந்த புறப்பட்ட விவசாயிகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்து தடுத்த போலீசார் கலைந்து போக செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டபட்டியில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை நடத்திய விவசாயிகள் அந்த சாலையை அமைக்க கூடாது என்றும், அமைத்தால் எதிர்த்து போராடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனை அறிந்த உளவுத்துறை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ஆச்சாங்குட்டபட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முத்துக்குமார், அன்னதானப்பட்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து உள்பட 7 பேரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் 5 பேரை விடுவித்த போலீசார் முத்துக்குமார், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து கிராம மக்கள் ஆலோசித்து வருவதால் அந்த கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலீசார் அந்த கிராமங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை தூண்டுபவர்கள் யார், யார்? விரைவு சாலை அமைக்கப்படும் இடத்தில் நிலம் இல்லாத வெளியூர் நபர்கள் யாரும் வந்து செல்கிறார்களா? என்பது குறித்தும் 24 மணி நேரமும் உளவுத்துறை போலீசார் சாதா உடையில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.