சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..! அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு..!
சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி அறிக்கையில், ஜூலை 8 (சனி) மற்றும் ஜூலை 9 (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, நாளை சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டிய திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.