தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை – அண்ணாமலை
அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என அண்ணாமலை பேட்டி.
விழுப்புரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும்.
மேலும் பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை; அதனை புரிந்து கொண்டு மாறுவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.