ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு! கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக உஸ்மான் கனி அறிவிப்பு!

Usman Ghani

ஊழல் புகாரை முன்வைத்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் உஸ்மான் கனி.

இந்தியாவில் நடைபெற உள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் ஆப்கானிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நாளை முதல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையில், தொடருக்கு முன்னதாக, அணியின் வீரர் ஒருவர் கிரிக்கெட்டிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

வங்கதேசம் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்படாத தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கனி, சமூக வலைத்தளத்தில் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்று வருவதாக பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக உஸ்மான் கனி அறிவித்துள்ளார்.

உஸ்மான் கனி ட்விட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஊழல் தலைமை என்னை பின்வாங்க வைத்துள்ளது. நான் எனது கடின உழைப்பைத் தொடர்வேன், சரியான நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படும் என ஆவலுடன் காத்திருப்பேன். அது நடந்தவுடன், நான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவேன். அதுவரை என் தேசத்துக்கு ஆதரவு அளிப்பேன்.

மேலும், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படாததற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார். அனைத்து வடிவங்களில் இருந்தும் என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு இந்த நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை, கிரிக்கெட் வாரியம் நல்லவர்கள் கைக்கு செல்லும் வரை அணிக்கு திரும்பமாட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு தலைமை தேர்வாளரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துளேன் என்றுள்ளார்.

26 வயதான உஸ்மான் கனி வங்காளதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் கனி ஆப்கானிஸ்தானுக்கு 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் முறையே 435 மற்றும் 786 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 20 முதல் தர போட்டிகளில் விளையாடி 39.35 சராசரியில் 1456 ரன்களை எடுத்துள்ளார். அவர் இதற்கு முன்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார், ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்