ஒடிசா ரயில் விபத்து : முழுக்க முழுக்க மனித தவறே காரணம்.! வெளியான பரபரப்பு தகவல்.!
ஒடிசா ரயில் விபத்துக்கு முழுக்க முழுக்க மனித தவறே காரணம் என விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மோதிய விபத்தில் 291 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கோர ரயில் விபத்து ரயில்வே விபத்தில் ஏற்பட்ட மிக பெரிய விபத்துகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் பல்வேறு விதமாக கூறப்பட்டு வந்தாலும், உரிய காரணத்தை அறிய CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விபத்து குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் , விபத்து நடந்த சமயத்தில் தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் எனவும், மெயின் தண்டவாளத்தில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் தவறாக கொடுக்கப்பட்ட சிக்னல் காரணமாக லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.