லியோ பட சர்ச்சை.. விஜய் மீது நடவடிக்கை.? தணிக்கை வாரியம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்.!
லியோ பட பாடல் சர்ச்சை தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தணிக்கை வாரியம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து நான் ரெடி பாடல் அண்மையில் வெளியானது. அதில் விஜய் புகைபிடிக்கும் படி தோன்றி இருந்தது. புகைபிடிப்பது , மது அருந்துவது தொடர்பான பாடல் வரிகள் மிகுந்த சர்ச்சையை எழுப்பியது.
மேலும் இது தொடர்பாக தணிக்கை வாரியம் மற்றும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. போதை பழக்கத்தை ஆதரிக்கும் விதமாக விஜய் படத்தில் நடிக்கிறார் ஆதலால் லியோ பாடலுக்கு தடை விதிக்க வேண்டும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியத்திடம் RTI செல்வம் என்பவர் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார் மீது மத்திய தணிக்கை வாரிய தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் RTI செல்வம் புகார் அளித்து உள்ளார். மேலும் விஜய் மீதான புகார் மீது அவருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டது.
இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக நான் ரெடி பாடல் அமைந்துள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.