மேகதாது அணை விவகாரம் : டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்.!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவேரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் நதிநீர் பங்கீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிடுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக முதல்வர் உடன் ஆலோசனை நடத்தினார் . அதன் பிறகு இன்று காவிரி மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்கு அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்ல உள்ளார் மேலும் இந்த பயணத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.