‘நம் புரட்சி தொண்டன்’.. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!
“நம் புரட்சி தொண்டன்” என்ற நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜை நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சியில் புரட்சி மாநாடு நடைபெற்ற நிலையில், அடுத்ததாக எந்த மாவட்டத்தில் நடத்தலாம்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், “நம் புரட்சி தொண்டன்” என்ற தினசரி நாளிதழை, புதிதாக தொடங்கவுள்ளதாக தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர் ராமச்சந்திரன் கூறுகையில், பாஜவுடன் தோழர்களாக இருக்கலாம், அக்கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியாது. வேண்டுமென்றால் நம்முடன் வரட்டும், அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. பகைத்து கொள்ளவும் தேவையில்லை. நமக்கு தொண்டர்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.