மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் – தமிழக அரசு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதில், முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவிய நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின், குறைந்தபட்ச வயது வரம்பு, ஆண்டு வருமானத்தை கணக்கீடு செய்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க முடிவு செய்திருப்பதாகவும், திட்டமிட்டபடி செப். 15ம் தேதி ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது எனவும் சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் கூறியிருந்தார்.
மேலும், இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.