முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – மணிப்பூர் முதலமைச்சர் ட்வீட்
மணிப்பூர் மாநில முதல்வர் பதவியில் இருந்து நான் விலகவில்லை என பிரேன் சிங் விளக்கம்.
மணிப்பூரில் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக இன்று காலை பரபரப்பான தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
மணிப்பூரில் தொடர் வன்முறை காரணமாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பிரேன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியானது. இதையடுத்து, மணிப்பூரில் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அம்மாநில ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் பிரேன் சிங் சென்றார்.
இதனிடையே, பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீட்டுக்கு வெளியே திரண்டு, ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முடிவை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரேன் சிங் ஆளுநரிடம் அளிக்க இருந்த ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இதையெல்லாம் கடந்து ஆளுநரை சந்திக்க சென்றிருந்தார் மணிப்பூர் முதலமைச்சர்.
இந்த நிலையில், பதவி விலகவில்லை என பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றுள்ளார். வன்முறைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகப்போவதாக தகவல் வெளியான நிலையில், முடிவை மாற்றினார். நெருக்கடியான சூழலில் நான் பதவி விலக போவதில்லை என்பதை தெளிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
At this crucial juncture, I wish to clarify that I will not be resigning from the post of Chief Minister.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2023