அரசின் உத்தரவை நிராகரித்த ட்விட்டர்..! ரூ.50 லட்சம் அபராதம் விதித்த கர்நாடக உயர்நீதிமன்றம்..!

Twitter

மத்திய அரசின் உத்தரவை நிராகரித்த ட்விட்டருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது.

ஆனால், நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், ட்வீட் மற்றும் கணக்குகள் இரண்டையும் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று கூறி, ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்காததற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை 45 நாட்களில் கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதி கிருஷ்ணா உத்தரவிட்டார். 

இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை முடக்க இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் எனவும் கூறியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்