ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும், இல்லை டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்..! திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..!

KVeeramani Report

ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்யவேண்டும், இல்லை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சென்னை காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்யவேண்டும், இல்லை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி, ‘ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு’ என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை “டிஸ்மிஸ்” செய்வதாக ஆணை வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும்.

இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய குடியரசுத் தலைவர் முன்வரவேண்டும். அவரை ஆளுநராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்.

மேலும், 13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, “ஆளுநரை டிஸ்மிஸ் செய்” என்ற ஒற்றைக் கோரிக்கையை – பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

K. Veeramani Report
K. Veeramani Report

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்