இனி நான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை – அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி
மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்தது என்று சிறப்பு காட்சி பார்த்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் இன்று முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதுவும், அரசியலில் முழுமையாக இறங்கிவிட்டதால் மாமன்னன் தான் எனது கடைசி படம் என்றும் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இத்திரைப்படம் பவர்ஃபுல் அரசியல் படம் என்று படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மாமன்னன்’ சிறப்பு காட்சி பார்த்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், அனைவர்க்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், மாமன்னன் படத்தின் முழு வெற்றியும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவுக்கு தான் சேரும். ரொம்ப கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். ஆறு மாத உழைப்பை தற்போது மக்கள் வரவேற்று அதனை கொண்டாடி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வரவேற்புக்கு நன்றி, மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்தது. இனி நான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை ராஜா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். நான் இந்த ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்த போறோம் என்றும் கூறவில்லை, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், எங்கள் வலியை சொல்கிறோம். இதனால் மக்கள் உணர வேண்டும், விழிப்புணர்வு வர வேண்டும், மக்கள் திருந்த வேண்டும், அதற்கு அரசு எப்போதும் துணையாக நிற்கும் எனவும் மற்றொரு கேள்விக்கு பதில் கூறினார்.