வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களில் இருந்து மனித உடலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு..!
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களுடன் மனித உடலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, கடலுக்கு அடியில் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் 5 பணக்காரர்கள் பயணம் செய்தனர். இந்த பயணம் தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டது.
அந்த தேடுதலின்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டைட்டனில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களை அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருந்து அமெரிக்க கடற்படையினர் மீட்டனர்.
இந்த கப்பலின் சிதைந்த பாகங்கள் சுமார் 12,500 அடி நீருக்கடியில், டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1,600 அடி கடல் தளத்தில் இருந்தது. தற்பொழுது மீட்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களுடன் மனித உடலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
அந்த சிதைவுகள் அமெரிக்க மருத்துவ வல்லுநர்களால் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளின் புலனாய்வாளர்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.