புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குச்சந்தை..! 64 ஆயிரத்தை நெருங்கிய சென்செக்ஸ்..! உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..
இந்திய பங்குச்சந்தைக் குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, நேற்று 446 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ், இன்று காலை 63.701 புள்ளிகளில் தொடங்கி 660.61 புள்ளிகள் என உயர்ந்து 63,630.61 புள்ளிகளாக வர்த்தகமானது.
இன்று காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகிவந்த மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 945 புள்ளிகள் உயர்ந்து 63,915 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு 64 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி காலையில் 199.65 புள்ளிகள் அல்லது 1.07% உயர்ந்து 18,890 புள்ளிகளாக வர்த்தகமானது. தற்பொழுது, 280.90 புள்ளிகள் உயர்ந்து 18,972 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி லிமிடெட், டைட்டன் கம்பெனி, லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
டெக் மஹிந்திரா , மஹிந்திரா & மஹிந்திரா , பஜாஜ் ஃபின்சர்வ் , கோடக் மஹிந்திரா வங்கி , விப்ரோ லிமிடெட் , எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் ஆகியவை அதிக லாபம் அடைந்துள்ளன.
எச்டிஎஃப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா & மஹிந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் ஆகியவை நஷ்டம் அடைந்துள்ளன.