உ.பி.யில் மத்திய பெண் அமைச்சரை ‘ஈவ்டீசிங்’ செய்த 3 வாலிபர்கள் கைது..!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனுபிரியா பட்டேல் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியாக உள்ள அப்னாதளம் கட்சியை சேர்ந்தவர்.

அவர் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இரவு காரில் வாரணாசிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 3 வாலிபர்கள் மற்றொரு காரில் வந்தனர். அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. காரில் வந்தவர்கள் மத்திய மந்திரியின் காரை முந்தி சென்று வழிமறித்தனர். அப்போது மந்திரியின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

அதை கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மத்திய மந்திரியை கேலி- கிண்டல் செய்து அவமதித்தனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசினார்கள்.

தொடர்ந்து பாதுகாவலர்கள் எச்சரித்ததால் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்த அவர்கள் மந்திரி அனுபிரியாவை கிண்டல் செய்தார்கள்.

நிலைமை மோசமானதை அறிந்ததும் வாரணாசி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த வாலிபர்களை பிடிப்பதற்காக போலீசார் தயாரானார்கள். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தயாராக இருந்தனர்.

அப்போது அந்த வாலிபர்களின் கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்