தொடரும் மணிப்பூர் கலவரம்.. மக்களை சந்திக்க நேரில் செல்லும் ராகுல் காந்தி.!
நாளை மணிப்பூருக்கு ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த மே மாதம் தொடக்கத்தில் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூக பிரிவினர்களுக்கு இடையே தொடர்ந்த மொதலானது இன்னும் நீடித்து வருகிறது. இந்த நாள் வரையில் மணிப்பூர் மாநிலம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. அதனால் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் செல்ல உள்ளார். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேச உள்ளார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில கலவரத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பலர் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.