டெல்லி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் போல் நாடகமாடி 4 லட்சம் மோசடி.!
டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் நாடகமாடி 4 லட்சம் மோசடி.
சவுதி அரேபியாவிலிருந்து வந்த 53 வயதான முகமது சுலேமான், என்பவரை இரண்டு நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நாடகமாடி ரூ.4 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சவுதி அரேபியாவிலிருந்து டெல்லி வந்திறங்கிய ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த சுலேமானிடம், இரண்டு போலி சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரிப்பது போல் காரில் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று, சுலேமானிடமிருந்து பாஸ்போர்ட், மொபைல் மற்றும் 19,000 சவுதி ரியாத் (இந்திய மதிப்பில் ரூ.4.15 லட்சம்)ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
செல்போன் மற்றும் வெளிநாட்டு கரன்சி எங்கிருந்து கிடைத்தது என்று சுலேமானிடம் அவர்கள் கேட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பிறகு அவர்கள் இருவரும் சுலேமானை ஓரிடத்தில் இறக்கிவிட்டு தங்கள் மூத்த அதிகாரியுடன் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.