உலகக்கோப்பை 23: மைதானத்தை மாற்றக்கோரிய பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றதா பிசிசிஐ?
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் 3 கோரிக்கைகளில், ஒரு கோரிக்கையை மட்டும் பிசிசிஐ ஏற்பு.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசி உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளதாக ஐசிசி இன்று அட்டவணையை வெளியிட்டது. இதில் அக்டோப 5 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர் கொள்கிறது. கிரிக்கெட் போட்டிகளில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது .
இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால், பாகிஸ்தான் தரப்பில் சில கோரிக்கைகளை ஐசிசி மற்றும் பிசிசிஐயிடம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்படி இந்தியாவிற்கு எதிரான போட்டியை குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்தக்கூடாது, மும்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டி நடத்தக்கூடாது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி சென்னையிலிருந்து மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்றைக்கு ஐசிசி வெளியிட்டுள்ள போட்டி அட்டவணைகளின் படி பிசிசிஐ, பாகிஸ்தானின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்று, பாகிஸ்தானுக்கு மும்பையில் எந்த போட்டியும் அட்டவணைப்படுத்தப்படவில்லை. அரையிறுதிப்போட்டி கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறுவதால், அரையிறுதிக்கு பாக் அணி தகுதி பெற்றால் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருந்தாலும் பாக் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாட இந்தியாவிற்கு வருகை தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.