மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மோடி அரசு முயன்று வருகிறது – நாராயணசாமி
முதல்வர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ரங்கசாமி அவர்கள் புலம்புவதில் அர்த்தம் கிடையாது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கல்வித்துறையில் மருத்துவம் படித்தவர்கள், மருத்துவப் பணிக்கு சேருகிறவர்கள் போன்ற படிப்புகளுக்கு அடுத்த ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வு வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மருத்துவ குழுவில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது.
அவர்கள் அந்தந்த மாநிலங்களில் படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும். இதனை தமிழக முதல்வர் எதிர்த்து பிரதமருக்கும், மருத்துவ துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. பாஜகவில் கூட்டணியாக இருக்கும் காரணத்தினால் அமைதியாக இருக்கிறார். மாநிலங்களை டம்மி ஆக்கிவிட்டு, மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மோடி அரசு முயன்று வருகிறது.
மத்தியில் உள்ள மோடி அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்திற்கு நிதி வழங்குவது இல்லை. தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் தமிழிசை சௌந்தர்ராஜன், சூப்பர் முதலமைச்சராக கடந்த 2 ஆண்டு காலமாக செயல்படுகிறார்கள். முதலமைச்சர் ரங்கசாமி டம்மி முதலமைச்சராக வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
முதல்வர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ரங்கசாமி அவர்கள் புலம்புவதில் அர்த்தம் கிடையாது. மாநில அரசின் அதிகாரத்தை துணை ஆளுநர் தமிழிசை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஏன் வெளியே புலம்புகிறீர்கள்? அப்படி உங்களுக்கு ஆழ தகுதி இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு வெளியே செல்லுங்கள் என விமர்சித்துள்ளார்.