கனமழை எதிரொலி:125 அடியை நெருங்கிய முல்லைப்பெரியாறு நீர்மட்டம்..!

Default Image

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை சாரல் மழையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இதுபலத்த மழையாக அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி 116.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 10-ந் தேதி 118 அடியாக உயர்ந்தது. நேற்று இதுமேலும் அதிகரித்து 121.10 அடியாக உயர்ந்தது.

கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 3½ அடி உயர்ந்து நீர்மட்டம் 124.70 அடியை அடைந்தது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்போதும் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 125 அடியை நெருங்கி உள்ளதால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வரும் 18-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு 9479 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3589 மி. கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு 353 கன அடி தண்ணீர் வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 36.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தேக்கடியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகளும், வனத்துறை சார்பில் 5 படகுகளும் என மொத்தம் 11 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் தேக்கடியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்ததால் படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது.

லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் இங்கு மின் உற்பத்தி நடைபெறும். தற்போது 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 104 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து நீர் திறக்கும் வாய்ப்பு இருப்பதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

நேற்று ஒரே நாளில் பெரியாறு அணையில் 805.8 மி.மீ., தேக்கடியில் 52.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்