ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே புதிய சாதனை… இந்தியா தான் இதில் முதலிடம்.!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பை 2023 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றிபெறும் இரு அணிகள் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும்.
இந்த தகுதிச்சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஜிம்பாப்வே அணி, இந்தியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றதே ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். தற்போது ஜிம்பாப்வே அணி, இந்திய அணிக்கு அடுத்ததாக இந்த வரலாறு படைத்துள்ளது.