இதுவரை 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்! 5000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி தகவல்
போதைப்பொருள் விற்பனை செய்தவர்களிடம் ரூ.18 கோடி பறிமுதல் செய்துள்ளதாகவும் ஏடிஜிபி தகவல்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே போதைப்பொருகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 2.0 என்ற மிஷன் மேற்கொள்ளப்பட்டது. இதில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், நடப்பாண்டு இதுவரை தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளின் 5000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவித்தார்.
மேலும், 2022-ல் 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் விற்பனை செய்தவர்களிடம் ரூ.18 கோடி பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக மாணவர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் போதையில்லா தமிழகம் சாத்தியமாகும் என கூறினார்.