அரிக்கொம்பன் யானை நல்ல நிலையில் உள்ளது..! புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தகவல்..!
அரிக்கொம்பன் யானை உடல் நல்ல நிலையில் உள்ளது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.
யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வரும் நிலையில், ஏற்கனவே அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேராமல் தனியாக வலம் வருகிறது. இந்த அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில் உள்ள நிலையில், சரியான உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் இருந்தாலும் அதன் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஊருக்குள் சுற்றித்திரியும் போது அரிசி சாப்பிட்டு வந்ததால் அரிக்கொம்பனின் உடல் உப்புசமாக காணப்பட்டது. தற்போது காட்டில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.