எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் கடலில் சிலை வைக்கின்றனர் – ஈபிஎஸ்
ரூ. 2 கோடியில் சிலை வைத்துவிட்டு, ரூ. 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே? என எடப்பாடி பழனிசாமி கேள்வி.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட நல்ல திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது; ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேச்சேரி – நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது; 7.5% ஒதுக்கீடு கொண்டுவந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழிசெய்யப்பட்டது. தலைவாசல் கால்நடை பூங்கா திட்டத்தை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது; கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.
ஆனால் திமுக ஆட்சியில், வீட்டு வரி, மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது; மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது ஏன்? எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் கடலில் சிலை வைக்கின்றனர்.
ரூ. 2 கோடியில் சிலை வைத்துவிட்டு, ரூ. 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே? தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.