தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்.!
நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலை முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது.
சென்னையிலும் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.