அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு.! செந்தில்பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்று செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு விசாரணை வரும் ஜூன் 27க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த வாரம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தை கூறாமல் கைது செய்துவிட்டனர் என கூறி செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற விதி 41ஏவின்படி எதற்காக கைது செய்கிறார்கள் என்பதை கைது செய்யப்படுவோரிடம் கூற வேண்டும். ஆனால் கைது காரணத்தை என்னவென்றே அமலாக்கத்துறை கூறவே இல்லை. சட்டவிரோதமாக இந்த கைது நடைபெற்றுள்ளது என பல்வேறு வாதங்களை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முன்வைத்தார்.
2 மணிநேரமாக நடைபெற்ற இந்த வாதத்தை அடுத்து, அமலாக்கத்துறைனர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க தங்களுக்கு அவகாசம் கேட்டது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.