மோடியை விட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி.!
மோடியை விட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் இருப்பதாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நாளை பாட்னாவில் முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டம்நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியின் பகுதியாக பீகார் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளை கூட்டுகிறார்.
இந்த எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னதாக பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியை விட அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. எதிர்கட்சிக் கூட்டத்தில் அனைவரும் அவர்களது கருத்தையும் முன்வைப்பார்கள்.
நானும், முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் முடிந்தவரையில் பல எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம், இது சிறந்த நடவடிக்கையாகும். தேர்தல் என்பது மக்களின் முடிவைப் பொறுத்தது. நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டமானது ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதற்கான அடித்தளம் அமைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் மேலும் கூறினார்.