சனாதன போர்வைக்குள் சன்மார்க்க நெறியை புகுத்த நினைக்கும் ஆளுநர்.! தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு.!
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்.
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அப்போது பேசிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். இதில், வள்ளலாரின் நூல் பிரமிப்பை ஏற்படுத்தியது.
பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு. எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன்.
அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது ஒருவரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை.
வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் தங்களது மதம் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்சனை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர் தெரிவித்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. மத்திய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளார்.